பாரிஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க மார்சே டெஸ் என்ஃபான்ட்ஸ் ரூஜ் சந்தையில் தீ விபத்து – சந்தை முற்றாக அழிவு


பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாரே மாவட்டத்தில் அமைந்துள்ள மார்சே டெஸ் என்ஃபான்ட்ஸ் ரூஜ் சந்தை, இன்று திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றாக அழிந்துள்ளது.

திங்கட்கிழமை அதிகாலை சுமார் 4.15 மணியளவில் தீ விபத்து தொடர்பாகத் தகவல் கிடைத்ததாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர், தீயைக் கட்டுப்படுத்தி அருகிலுள்ள கட்டிடங்களுக்குப் பரவாமல் தடுத்தனர். எனினும், சந்தையின் கூரையும் உட்புறக் கட்டமைப்புகளும் கடுமையாகச் சேதமடைந்ததுடன், உலோகக் கட்டமைப்பின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்துள்ளது.

சம்பவ இடத்துக்குப் பொறுப்பான அதிகாரி பியர் டி பூவியர், சந்தை முற்றாக அழிந்துவிட்டதாகத் தெரிவித்தார். பாரிஸ் சென்டர் நகர மேயர் ஏரியல் வெய்லும், அருகிலுள்ள கட்டிடங்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தத் தீ விபத்தில் குடியிருப்பாளர்களுக்கோ கடைக்காரர்களுக்கோ காயம் ஏற்படவில்லை. எனினும், மீட்புப் பணியின்போது ஒரு தீயணைப்பு வீரருக்குப் புகை நுகர்வு காரணமாக லேசான பாதிப்பு ஏற்பட்டது. அவருக்குச் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிளேஸ் டி லா ரிபப்ளிக் பகுதிக்கு அருகிலுள்ள ரூ டி பிரெட்டேன் தெருவில் அமைந்துள்ள இந்தச் சந்தை, பாரிஸின் முக்கியமான உணவுச் சந்தைகளில் ஒன்றாக விளங்கியது. பல்வேறு நாடுகளின் உணவு வகைகளை வழங்கும் சிறிய உணவகங்களும் உணவுக் கடைகளும் இங்கு இயங்கி வந்தன. பாரிஸ் நகரவாசிகள் மட்டுமன்றி, சுற்றுலாப் பயணிகளும் இச்சந்தைக்கு அதிகளவில் வருகை தந்தனர்.

1615ஆம் ஆண்டில் பதின்மூன்றாம் லூயி மன்னரின் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட இந்தச் சந்தை, 1982ஆம் ஆண்டு முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுச்சின்னமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் சிறந்த சந்தைகளில் ஒன்றாகவும் இது அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

அருகிலிருந்த முன்னாள் அனாதை இல்லத்தின் பெயரால் இச்சந்தை அழைக்கப்படுகிறது. நவாரின் மார்கரெட்டால் 1536ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அந்த அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்ட குழந்தைகள் சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்ததால், அவர்கள் 'என்ஃபான்ட்ஸ் ரூஜ்' என அழைக்கப்பட்டனர். பிரெஞ்சு மொழியில் இதற்கு 'சிவப்புக் குழந்தைகள்' என்று பொருள். அந்த அனாதை இல்லம் 1772ஆம் ஆண்டு மூடப்பட்ட பின்னரும், அதன் பெயர் சந்தையுடன் தொடர்ந்து நிலைத்திருந்தது.

தீ விபத்துக்கான காரணம் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், பாரிஸின் பாரம்பரியத்தையும் உணவுக் கலாசாரத்தையும் பிரதிபலித்த முக்கியமான சந்தையொன்று அழிந்திருப்பது நகர மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

No comments